Tuesday, August 20, 2024

நிலம் - பார்கவன் சோழன்


சமீபத்தில் நிலம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடக்கிறது. பல்வேறு குடிகளுக்கு நிலம் இல்லை நிலம் எல்லாம் மன்னர்களுக்கே சொந்தமானது என்றெல்லாம் பேசி வருகிறார்கள். அந்த நிலத்தை மன்னர்கள் பலருக்கும் வழங்கினார்கள் ஆனால் அந்த நிலங்கள் ஒரு சாரரிடம் இருந்து பறித்தார்கள் என்பது எல்லாம் தான் இவர்கள் முன்வைக்கும் வாதம். 

முதலில் நிலம் என்பது உடமையாக மாறிய வரலாற்றை புரிந்து கொண்டால் தான் இதற்கு எல்லாம் விடை கிடைக்கும். முதலில் வேட்டைசமூகம் உணவு சார்ந்து பயணிக்கும் நிலையிலே இருந்தது. அடுத்து மேய்ச்சல் சமூகம் ஆநிரைகளை செல்வமாக கருதினார்கள். தங்கள் ஆநிரைகளை ஓட்டிகொண்டு இவர்களும் மேய்ப்பர்களாக பயணித்தவர்களாக தான் இருந்தனர் என்பது வரலாறு! 

நிலம் உடமையாக மாறுவதற்கு முன்பு பெரும்பகுதி காடாக தான் இருந்தது. குறிப்பாக ஆற்றுப்படுகைகளில் இருந்த காடுகளை திருத்தி கழனியாக்கியவர்கள் வேளாளர்கள்.  வேளாளர்கள் தான் காடு திருத்தி நாடாக்கியவர்கள் என்ற சிறப்பையும் பெற்றவர்கள். 

ஓடுகிற ஆற்று வெள்ளத்தை தடுத்து காடு திருத்திய நிலத்தை பண்படுத்தி பயிர்தொழிலை மேற்கொள்ள துவங்கினர். பெரும்பாலும் இந்த கடுமையான பணியை வேளாளர்கள் மட்டுமே செய்தனர். அதன்பிறகு தான் நிலம் வேலிகளாக உடமைகளாக மாற துவங்கியது. காடு திருத்தியவர்களுக்கே கழனி சொந்தம் என்ற நிலையில் தான் நிலம் உடமையானது. 

நிலவுடமை மரபில் இருந்து தான் அரச கட்டமைப்பு பிரம்மாண்டமாக உருபெற்றது. அதுவரை ஆநிரைகளை காக்க போரிட்டவர்கள் நிலத்துக்காக போரிட தொடங்கினார்கள். அப்போது இவர்கள் கூறும் ஆண்டான்,அடிமை, போன்ற முறைகள் எல்லாம் இருந்திருக்கவில்லை. 

பயிர்தொழிலை மேற்கொண்ட வேளாளர்கள் அனைவருக்கும் அதை பகிர்ந்து கொடுத்து பயிர்தொழிலை பரவலாக்கும் பணியில் தான் ஈடுபட்டனர். அதனால் தான் வேளாளர் என்பதற்கு பொருள் கொடையாளர்கள் அல்லது வள்ளல்தன்மை கொண்டவர்கள் என குறிப்பிடுகின்றனர். 

இதில் வணிகம் புகுந்த காலம் தான் எல்லாம் மாறுகிறது. நிலத்தில் இருந்து அரசுகள் வணிகத்தை நோக்கி நகர்கிறது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு வணிக பயணம் மேற்கொள்கின்றனர். வணிகம் அரசை இயக்க ஆரம்பித்த காலத்தில் தான் இவர்கள் முன்வைக்கும் அத்தனை குழப்பங்களும் தோன்றிய காலம் எனலாம். இதுவரை இந்த கோணத்தில் வரலாற்றை புரிந்துகொள்ள நாம் இன்னும் முற்படவில்லை. 

நிலம் முழுவதும் அரசின் கட்டுபாட்டிற்கு வந்தது. அவர்களின் தேவை கருதி பல்வேறு குடிகளை குடியமர்த்துகின்றனர். அவர்களுக்கு எல்லாம் நிலங்களை வழங்குகின்றனர். அரசு, சமயம், வணிகம் இதை முழுமையாக ஆய்வு செய்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். வணிக அரச அதிகார மையங்கள் உருவெடுக்க உருவெடுக்க அவர்களுக்கு சேவை செய்யும் ஆட்களும் தேவைப்படுவார்கள் என்பது இயல்பானது. பிரம்மாண்டங்கள் தோன்றுகிற பொழுது ஆள்கிறவனும் அவனுக்கு சேவகம் செய்யும் முறையும் தோன்றும் என்பது தான் நிதர்சனம். இதில் ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி என்பது எல்லா காலத்திலும் நடந்து வந்துள்ளது என்பது தான் உலக வரலாறு. 

ஒரு போருக்கு பின் தான் பல கதைகள் அடங்கியிருக்கிறது. வணிகத்தை பரவலாக்க நடந்த படையெடுப்புகளின் வரலாற்றில் தான் ஆண்டான் அடிமை முறை என்பது தலையெடுத்தது. நகரங்கள் உருவெடுத்த பின் தான் இதெல்லாம் தோன்றியது. உதாரணத்திற்கு ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நகரங்களில் துப்புரவு பணி செய்வதற்கு என்றே தனி மக்கள் தேவைப்பட்டனர். அவர்களை அதற்கு பிறகு சமூகம் எப்படி பார்த்தது என்பது எல்லாம் தனி வரலாறு. இதுபோல நகரங்களில் வாழ்ந்த மக்களுக்கு தான் பணியாளர்கள் நிறைய தேவைப்பட்டார்கள். 

இதன் தாக்கம் தான் பிற்காலத்தில் நிலவுடமையிலும் எதிரொலித்தது. ஆனால் பெரும்பான்மையாக உழவு தொழிலை மேற்கொண்டவர்கள் தங்கள் நிலத்தில் தாங்களே இறங்கி பணி செய்தார்கள். யாரையும் பெரிதாக வைத்திருக்கவில்லை. 2 முதல் 4 % இருந்த பெரும் நிலவுடமைகளில் தான் பண்ணையாட்கள் இருந்தார்கள். இது நகரங்களின் தாக்கத்தில் உருவானது தான்.

எனவே நிலம் என்பது யாரிடம் இருந்தும் பறிக்கபடவில்லை. நிலத்தை மட்டுமே நம்பி இங்கு யாரும் இருக்கவில்லை. பயிர்தொழிலை கடந்து பல மரபு தொழில்களை நம்பி இங்கு பெரும் கூட்டமே இருந்தது. அதை இணைக்கும் புள்ளியாக பயிர்தொழில் இருந்தது எனலாம். காடு திருத்தி நாடாக்கிய மக்கள் நான் நிலத்தை மட்டுமே நம்பி இருந்தவர்கள். இன்று அவர்களும் அந்த மரபு தொழிலை விட்டு வெளியேறிவிட்டார்கள். 

வணிகம் என்ற ஒன்று தான் எல்லாவற்றையும் மாற்றியமைத்துள்ளது. வணிகத்தின் பசிக்கு இந்த உலக மக்கள் மொத்தமும் உழைத்தாலும் போதாது என்ற உண்மையில் இருந்து தான் யார் ஆண்டான் யார் அடிமை என்கிற அனைத்தும் தோன்றுகிறது. இதை வெறுமென நிலவுடமை, மன்னர் காலம் என்றெல்லாம் சுருக்கிவிட முடியாது. அதற்கு பின் உள்ள வணிக அரசியலை புரிந்துகொண்டால் மட்டுமே இதன் பின்னுள்ள அரசியலையும் அதன் கட்டமைப்பையும் புரிந்து கொள்ள முடியும்.

- பார்கவன் சோழன்

1 comment:

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சத்யா டீ ஸ்டால்

  ஒரு டீக்கடை சோற்றுக்கடை ஆகுமா? புராணத்தில் இடம் பெறுமளவிற்கு என்ன சிறப்பு? சேரன்மகாதேவியில் பாபநாசம் சாலையில் அமைந்துள்ள ஒரு கீற்றுக் கொட...