Friday, October 11, 2024

உணவு பிரியர்களின் கவனத்திற்கு - விஞ்சை விலாஸ் (Since 1924)

 

 


 சுவையில் விஞ்சி நிற்கும் விஞ்சை விலாஸ்!!

நான் விபரம் அறிந்து முதலில் சென்ற உணவகம் இது. இந்த கடைக்கு சென்று வந்த அந்த நாட்கள் இன்றும் நெஞ்சில் உள்ளது. இன்று கல்லாவில் இருக்கும் சண்முகம் அண்ணன் Shunmuga Nallaperumal எமது சின்ன அண்ணன் சிதம்பரத்தின் Chidhambaram Sundaram தோழன்....

இந்த கடை நான்கு மேசைகளும், ஒரு அடுக்களையும் இடையில் கல்லாப்பெட்டியும் கொண்டது. கடையில் இடம்பிடிக்க நாம் அலைபாய்வது போல பல்வேறு நிறுவனங்களின் நாட்காட்டிகளும் கெஞ்சும் போல... சுவர்தெரியாத வண்ணம் நாட்காட்டிகள் அத்தனை இருக்கும் அந்த கடையில் தொங்கும் நாட்காட்டி தாள்களை கிழித்து வைத்து வலம்புளி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அனைவரும் விபூதி குங்குமம் மடக்கிக்கொள்ளலாம் என்று நினைத்ததுண்டு...

கடையில் சிறப்பு காலை, மாலை கிடைக்கும் பூரி கிழங்கு இந்தக் கடை பூரி கிழங்கு தனி சுவை... வெங்காயம் கூட்டி இருக்கும் அந்த கிழங்கு தனி மனத்துடன் விளங்கும். இட்லிக்கு முறுக்கு வைத்து சாப்பிடுவது திருநெல்வேலி குசும்பு... அந்த வகையில் சுவைக்க விஞ்சை விலாஸ் மற்றும் தெற்கு ரத வீதி மாரியம்மன் விலாஸே சரணம்.

முன்பு இந்த கடை விலை பலகையில் ஒரு வித்தியாசம் இருக்கும் அது எண்ணெய் மூன்று ரூபாய் என்று இருக்கும்... என்னடா இது எண்ணெய்க்கு தனி விலையா என்று யோசித்தால் எத்தனை சட்னி இருந்தாலும் பொடி வைக்காமல் இட்லியை இடாத திருநெல்வேலிக்காரர்கள் நாக்கிற்கு அருமையான பொடி இங்கே கிடைக்கும் அன்று பொடி இலவசம் ஆனால் எண்ணெய்க்கு காசு 🤪

மாலையில் கிடைக்கும் தயிர் வடை சிறு வயதில் எனக்கு மிகப்பிரியம்.. தயிர் வடையைக் கண்டுபிடித்தது கைலாசம் பிள்ளையோ என்று நினைக்க வைத்தது. 

மேலும் மாலை கிடைக்கும் தக்காளி ஊத்தப்பம் இந்திரன் உண்ட உணவோ என எண்ணச் செய்யும் வட்ட தக்காளி துண்டுகளை தோசை மாவு மீது போட்டு அதன் மீது தனித்துவமான பொடி ஒன்று தூவி ஓரம் முறுகிய தக்காளி ஊத்தப்பம் கெட்டி சட்னியுடன் தொண்டையில் இறங்கும் போது நம்ம மூளை தானா இன்னோரு ஊத்தப்பம் என்று சொல்லும் மக்களே....

 


கடைசியாக இங்கு கிடைக்கும் நன்னாரி பால் பல்வேறு அரசியல் தலைவர்கள் திருநெல்வேலிக்கு வந்தால் சுவைப்பது... பாலில் நன்னாரி கலந்தால் திரிந்து விடும் ஆனால் இவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட நன்னாரி கலந்து தரும் பாலில் திரியாது இருப்பது சிறப்பு... வாயெல்லாம் மணக்க கல்லாவில் பணம் கட்ட வந்தால் பொரிவிளங்காய் மினுமினுக்கும், அதை அள்ளி வாங்கி வீட்டுக்கு வருவதுதான் வந்ததும் அம்மா இதை நான் செஞ்சா சாப்பிட மாட்ட என்று திட்ட அதையும் வாங்கி கொள்ளத்தான்........

படம்: Siva Nataraj


- கோமதி சங்கர் சுந்தரம்

No comments:

Post a Comment

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சத்யா டீ ஸ்டால்

  ஒரு டீக்கடை சோற்றுக்கடை ஆகுமா? புராணத்தில் இடம் பெறுமளவிற்கு என்ன சிறப்பு? சேரன்மகாதேவியில் பாபநாசம் சாலையில் அமைந்துள்ள ஒரு கீற்றுக் கொட...