தத்துவம் பேசும் சங்கர் அண்ணன் கடை
நெல்லையப்பர் ஆலயத்தின் சொக்கப்பனை மூக்கில் ஒரு தனி அடையாளம் எங்கள் சங்கர் அண்ணனின் சங்கர் ஸ்சுவீட்ஸ் கடை. அவாளை நாங்கள் சங்கர் அண்ணன் என்றாலும் அவர் பெயர் லெக்ஷ்மணன் என்பதாம்.
விபரம் தெரிந்த வயதில் இருந்தே நாம் செல்லும் எளிமையான பலகாரக்கடை. அண்ணன் கடையில் வாடிக்கையாளர் தமக்கு என்றைக்குமே ராஜ மரியாதை தான். சென்றவுடன் கையில் அப்போது தயார் செய்த பண்டம் ஒன்றே நாம் சுவைக்க இருக்கும்.
பழைய பண்டம் என்றுமே தருவதில்லை, சிறிய கடை, அதன் பின்னால் சிறு தயாரிப்பு கூடம்! சூடச்சூட பண்டங்கள் நம் வசம் அருமையாகத் தரும் அண்ணன் கரங்கள் தூய்மையானவை.
உண்ணும் உணவோடு உணவருந்தவந்தோர் உணர உன்னதமான உணர்ச்சிவாக்கியங்களை உருவாக்கியருளும் உத்தமர் உறையும் உணவுப்பண்டசாலை.
அண்ணன் கடை தத்துவங்களுக்கு என் வட்டாரத்தில் நிரம்ப இரசிகர்கள் உண்டு. என் புலனச்சுவற்றில் அடிக்கடி அண்ணன் கடை தத்துவங்கள் மிளிரும்! நண்பர் சிவ.நடராஜும் நானும் சேர்ந்தால் இங்கு சுக்குக் காபி குடும்பத்தோடு அருந்துவோம், அருமை நண்பன் மீனாட்சி சங்கருக்கு நெய்க்கடலை, என் மகளுக்கு அண்ணன் கடை பூந்தி, இங்கு சூடச்சூட தயாராகும் அனைத்து பட்டங்களும் நமக்கு ப்ரியமே! அண்ணன் அல்வாவிற்கு அருமையான சுவையுண்டு!அதிலும் இங்குள்ள நெய்விளங்காய் என்றுமே நெஞ்சில் தனியிடம் அமர்ந்தது தான்.
சுக்குக் காபியில் என்ன சேர்க்கிறேன் என்று கையால் எழுதிய அட்டவணைகள் அண்ணன் கடையில் அளவுக்குறிப்போடு தொங்கும்!
என்று போனாலும் மகா டூரிஸ்ட் இட்டுச்செல்லும் புதுச் சுற்றுலா பட்டியல் இங்கு தொங்கும், மேலும் சில உள்ளூர் வணிகர்களது விளம்பரமும் இங்குண்டு.
இவை அனைத்தையும் தாண்டி குணத்தில் தங்கமான அண்ணன் கடையில் என்று போனாலும் அன்று நம் நெஞ்சினிக்க செய்தி பலரை சிந்திக்கச் செய்யும் வண்ணம் சிலேட்டில் கையால் எழுதப்பட்டிருக்கும். நாளும் ஒரு சிந்தனை நவிலும் அண்ணன் கடையை நெல்லையில் மறவாதீர்.
- கோமதி சங்கர் சுந்தரம்
No comments:
Post a Comment