Tuesday, December 24, 2024

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. இராமன் கடை

 


திருநெல்வேலி நகரம் வாசிகள் பலருக்கும் செவிக்கும் வயிற்றுக்கும் உணவு ஈந்த சிறு சோற்றுக்கடை! இன்றைக்கு நெல்லையின் முதலாளிகள் மற்றும் முன்னாள் முதலாளிகள் பலர் தங்களது தொழிலாளர்களோடு சமமாய் உண்ட உணவகம்! 


சிறு கடை இது, கீழப்புதுத் தெருவில் இருந்தது, இராமன் மாமா என்று நாங்கள் அழைக்கும் மாதாவே நளபாகம்! காலை பூரி, இட்லி, வடை, கிழங்கு, கல் தோசை என கடை அனலாய் இருக்கும்! வாங்க மருமகனே என்று என்னை இன்றும் வாஞ்சையோடு அழைக்கும் இராமன் மாமாவின் காஃபி என் நாவில் இதை எழுதும் போது கூட மணக்கிறது!


மதியம் குழைவான சித்ரான்னங்கள், இரவு மீண்டும் இட்லி தோசை என்று கடை முழுவதும் இயங்கும்!


இந்தக் கடையின் வடை தனி மணம் மிக்கது, பொறியில் எலி மாட்டாத போது வீட்டில் எடுக்கப்படும் பிரம்மாஸ்திரம் இராமன் கடை வடை தான்! அந்த மணத்திற்கு எலி அன்றே மாட்டிவிடும்! அதே வடை தான் அன்று எங்களுக்கு மோர்க்குழம்புக்கோ தயிர்சாதத்திற்கோ! பின்னே எலிக்கு மட்டும் வடை வாங்கிட்டு வந்தா வடையை நாங்களே காலி செய்து விடுவோம் என்ற அச்சந்தான்!


அன்போடு சுடச்சுட இராமன் மாமா கையை உதறி உதறி எனக்கு பரிமாறிய இட்லிக்கும், பூரிக்கும் நாம் என்றுமே அடிமை தான்!


இந்தக் கடையில் தான் எங்கள் வார்டின் தலைவிதியே இருக்கும் அன்று என்றால் மிகையல்ல, முன்னாள் இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள், கழகங்களின் பேச்சாளர்கள், ஸ்தாபன முதலாளிகள் எனப் பலருக்கும் இராமன் கடையே தஞ்சம்! இங்கு தேர்தல் முடிவுகளை முன்னரே நாங்கள் அறிந்துகொள்வோம் அன்று! 


இன்று அவ்வாறு கடைகள் உங்கள் பக்கம் உள்ளதா? ஏனெனில் இராமன் கடையும் இன்றில்லை மக்கள் மனமறிந்து இயங்கும் மாமன்ற உறுப்பினர்களுமில்லை....

Monday, December 2, 2024

அமெரிக்காவின் பொருளாதார சர்வாதிகாரம் - பார்கவன் சோழன்



டாலர் அல்லாத வேறு நாணயத்தை பயன்படுத்தினால் 100 % வரி விதிப்பேன் என இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் டிரம்ப்.  


உலக பொருளாதார தலைமையிடமாக அமெரிக்க மட்டுமே இயங்க வேண்டும் என்பதில் தொடங்குகிறது உலக அரசியல்.

சீனா பல்வேறு முயற்சிகளில் அமெரிக்காவுடன் போட்டியிட்டு வருகிறது. உலக பொருளாதார தலைநகரம் நியூயார்க்கா அல்லது பெய்ஜிங்கா என்பது இங்கு பிரதான அரசியல். 

மக்கள் தொகையிலும் வலிமையிலும் பொருளாதாரத்திலும் ஆசியா தான் முதன்மையிடம் வகிக்கிறது. 

ஆனால் ஆசியா நாடுகளுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கி அதை பயன்படுத்தி தான் உலகின் பொருளாதார தலைமையாக தன்னை நிலை நிறுத்தி வருகிறது அமெரிக்கா.

டிரம்ப் வென்றதை இந்தியர்கள் சிலர் கொண்டாடுவதை காண முடிந்தது. உள்ளூர் தேர்தல் அரசியலில் முழ்கி கிடக்கும் இந்தியர் எவருக்கும் உலக அரசியல் விழிப்புணர்வு கிடையாது. உலகில் நாம் ஆசியர்கள் என்ற புரிதலும் கிடையாது. 

இந்தியா சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் அமெரிக்காவின் நுண்ணரசியலை உணர்ந்து உலகில் ஆசியர்கள் என்ற ஒற்றை அடையாளத்தில் இணைந்து அமெரிக்காவின் அரசியலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை. 

இங்கு ஒருவர் பலரையும் கட்டுபடுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் அடிபணிய வைத்து உலகின் தலைமையாக இருப்பது ஆபத்தானது. 

செயற்கை முரண்பாடுகளை உருவாக்குவதில் வல்லவர்கள் அமெரிக்கர்கள். இன, மொழி, மத பிளவு மற்றும் நாடு எல்லை பிரிவுகளில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மேலோட்டமாக பார்த்தால் நமக்கு எதிரில் நிற்பவன் செய்வது போல் தோன்றும் ஆனால் இதை எல்லாம் மறைமுகமாக மற்றொரு சக்தி அங்கு காய்நகர்த்தி கொண்டிருக்கும். இதெல்லாம் வரப்பு சண்டைக்கு ஒப்பானது தான். 

பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நாம் சண்டையிட்டு கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதேதான் நம்முடன் சீனா, பாகிஸ்தானும் பகைத்து கொள்வதில் எந்த பயனுமில்லை. மாறாக அமெரிக்கா எனும் சர்வாதிகாரத்திற்கு இதன்மூலம் தீணிப்போட்டு கொண்டிருக்கிறோம். 

அமெரிக்காவின் நுண்ணரசியலை ஒவ்வொரு ஆசியர்களும் உணர வேண்டும்.
அமெரிக்கா விசயத்தில் நாம் ஆசியர் என்கிற உணர்வில் செயல்பட்டால் மட்டும்தான் இந்த அரசியலை வெல்ல முடியும்.

இந்தியா சீனா மற்றும் ஏனைய ஆசிய நாடுகள் இணைந்துவிட்டால் அமெரிக்கா எனும் சர்வாதிகாரம் நம்மிடம் பணியும்... 

- பார்கவன் சோழன்

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சத்யா டீ ஸ்டால்

  ஒரு டீக்கடை சோற்றுக்கடை ஆகுமா? புராணத்தில் இடம் பெறுமளவிற்கு என்ன சிறப்பு? சேரன்மகாதேவியில் பாபநாசம் சாலையில் அமைந்துள்ள ஒரு கீற்றுக் கொட...