திருநெல்வேலி நகரம் வாசிகள் பலருக்கும் செவிக்கும் வயிற்றுக்கும் உணவு ஈந்த சிறு சோற்றுக்கடை! இன்றைக்கு நெல்லையின் முதலாளிகள் மற்றும் முன்னாள் முதலாளிகள் பலர் தங்களது தொழிலாளர்களோடு சமமாய் உண்ட உணவகம்!
சிறு கடை இது, கீழப்புதுத் தெருவில் இருந்தது, இராமன் மாமா என்று நாங்கள் அழைக்கும் மாதாவே நளபாகம்! காலை பூரி, இட்லி, வடை, கிழங்கு, கல் தோசை என கடை அனலாய் இருக்கும்! வாங்க மருமகனே என்று என்னை இன்றும் வாஞ்சையோடு அழைக்கும் இராமன் மாமாவின் காஃபி என் நாவில் இதை எழுதும் போது கூட மணக்கிறது!
மதியம் குழைவான சித்ரான்னங்கள், இரவு மீண்டும் இட்லி தோசை என்று கடை முழுவதும் இயங்கும்!
இந்தக் கடையின் வடை தனி மணம் மிக்கது, பொறியில் எலி மாட்டாத போது வீட்டில் எடுக்கப்படும் பிரம்மாஸ்திரம் இராமன் கடை வடை தான்! அந்த மணத்திற்கு எலி அன்றே மாட்டிவிடும்! அதே வடை தான் அன்று எங்களுக்கு மோர்க்குழம்புக்கோ தயிர்சாதத்திற்கோ! பின்னே எலிக்கு மட்டும் வடை வாங்கிட்டு வந்தா வடையை நாங்களே காலி செய்து விடுவோம் என்ற அச்சந்தான்!
அன்போடு சுடச்சுட இராமன் மாமா கையை உதறி உதறி எனக்கு பரிமாறிய இட்லிக்கும், பூரிக்கும் நாம் என்றுமே அடிமை தான்!
இந்தக் கடையில் தான் எங்கள் வார்டின் தலைவிதியே இருக்கும் அன்று என்றால் மிகையல்ல, முன்னாள் இந்நாள் மாமன்ற உறுப்பினர்கள், கழகங்களின் பேச்சாளர்கள், ஸ்தாபன முதலாளிகள் எனப் பலருக்கும் இராமன் கடையே தஞ்சம்! இங்கு தேர்தல் முடிவுகளை முன்னரே நாங்கள் அறிந்துகொள்வோம் அன்று!
இன்று அவ்வாறு கடைகள் உங்கள் பக்கம் உள்ளதா? ஏனெனில் இராமன் கடையும் இன்றில்லை மக்கள் மனமறிந்து இயங்கும் மாமன்ற உறுப்பினர்களுமில்லை....
No comments:
Post a Comment