Friday, October 25, 2024

சோற்றுக்கடை புராணம் தொடர் - ft. ஆழ்வார்குறிச்சி சண்முகம் பிள்ளை கடை

 


சுமார் ஒன்பது பேரே உட்கார்ந்து உணவு கொள்ளும் வண்ணம் அமைந்த ஒடுக்கமான கடை இது அம்பை -தென்காசி நெடுஞ்சாலையில் இயற்கை எழில் பொங்க அமைந்திருக்கும் ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் தெப்பக்குளத்தருகே அமைந்த சந்தி விநாயகர் ஆலயத்திற்கு சமீபத்தில் ரோட்டடியில் மேட்டில் அமைந்துள்ள சிறிய கடை.

காலையும் மாலையும் நாவுக்கு ருசியாகவும், உடலுக்கு ஏதுவாகவும் நல்ல உணவளிக்கும் சிற்றுண்டி சாலை.

திருநெல்வேலியில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கடையின் காரவடையும், சிவசைல நாதர் ஆலயமும், அவ்வாலயத்திற்கு பின்னே இருக்கும் ஆலமரமும் நமக்கு ஆகச் சிறந்த Stress Buster.

பெரும்பாலும் விறகடுப்பில் தயாராகும் இவர்களது உணவுகள் மிகத் தரமாகவே உள்ளது. காலையில் தயாராகும் சூடான நாலுவிரலுக்குள் அடங்கும் வெண்ணிற இட்லிக்கு அவர்கள் தரும் சட்னியோடு நமது குடல் கொள்ளும் அளவு உண்டாலும் இவர்தம் மொறு மொறு காரவடை வேறு ஒரு போதை தந்து நம்மை ஈர்க்கும். இதற்காகவே நாம் அடிக்கடி இந்த ஊருக்கு பயணிப்பதுண்டு.

இட்லி போதாது என்றால் நாம் வாங்கும் பூரி கிழங்கோடு சேரந்து ஏழிசை இயைந்தொரு புது இராகம் ஆனது போலிருக்கும். ஆமைவடையும் உளுந்தவடையும் நம் உணவிற்கு ஏகாந்த துணைவர்கள்! முடிவில் சிறு குவளையில் இவர்தம் கடையின் கிராமத்து காஃபி நம் ஜென்மம் இன்று ஈடேறியதைக் குறிக்கப் பெரு ஏப்பம் வெடிக்கச் செய்யும்.

வாங்கிய பொருட்களை அன்றழிக்கும் சோற்றுக்கடைகள் என்றைக்குமே உத்தம சுவையுடையோர் தான். அதில் ஆழ்வார்குறிச்சி சண்முகம் பிள்ளை கடை சிறப்பானதே!


- கோமதி சங்கர் சுந்தரம்





Wednesday, October 23, 2024

INDUS தமிழ் 49



இந்த வார இண்டஸ் இதழ் உங்களுக்காக!
இந்த வார இதழில் பாண்டியர் போர்ப்படை ஆய்வுக்கட்டுரை சிறப்புக் கட்டுரையாகவும் மற்றும் கோமதி சங்கர் சுந்தரின் சோற்றுக்கடை புராணத் தொடரில் ஆழ்வார்குறிச்சி சண்முகம் பிள்ளை கடை குறித்த ஒரு சுவைமிகு கட்டுரையும் மற்றும் எனது நாவாய் தொடரும் நமது அன்பர்களின் கட்டுரைகளும் வெளிவந்துள்ளது.

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்க. 

சிவசக்தியின் திருவருளால்... 

INDUS இதழ் : Download Pdf

சித்திரமேழி பெரியநாட்டார் சபை வேளாளர் - பார்கவன் சோழன்.



தமிழர் அரசியல் சூழலில் வரலாறு பற்றி பெரிய புரிதல் யாருக்கும் இல்லை. குறிப்பாக போலி வரலாறு பல கட்டமைக்கபட்டு தமிழர்களை நம்ப வைத்தனர். அதன் பொருட்டு வேளாளர்கள் நாயக்கர் காலத்தில் நிலம் பெற்றவர்கள் என்றும் ஆதீன நிலங்கள் அப்படி உருவானது தான் என்றும் கதைகட்டி விட்டனர். ஆனால் உண்மை என்னவென்றால் நாயக்கர்கள் ஒருபோதும் ஊர் நாட்டு பகுதிகளுக்குள் வந்ததே இல்லை. ஊர்நாட்டை ஆட்சிசெய்த வேளாளர்களிடமும் நகரத்தை ஆட்சி செய்த நகரத்தார்களிடமும் நாயக்கர்கள் என்றுமே நெருங்கியதில்லை என்பது தான் உண்மையான வரலாறு. 

சித்திரமேழிப் பெரியநாட்டார் சபை வேளாளர்களை தலைமையாக கொண்டு சோழர்களால் உருவாக்கபட்ட அமைப்பு. இவ்வமைப்பு சோழநாடு, தொண்டைநாடு, கொங்குநாட்டு பகுதிகளில் அதிகாரம் படைத்த அமைப்பாக இயங்கியது. காடு திருத்தி நாடாக்கிய வேளாளர்கள் கட்டமைத்த ஊர்களில் நிலமேலாண்மை, நீர்மேலாண்மை மட்டுமல்லாது குடிமேலாண்மையையும் கட்டமைத்தார்கள். வேளாளர்களால் கட்டமைக்கபட்ட பதினெட்டு குடிகளையும் கொண்டுதான் ஊர்நாட்டார் நிர்வாகம் செயல்பட்டது.

விளைச்சல் நிலங்களை உருவாக்கி ஊர்களை பெருவளநாடுகளாக கட்டமைத்த பின்னர் கோவில்களுக்கு நிலங்களை கொடையாக வழங்கினர். சைவ மடங்களை கட்டமைத்து தமிழ் வளர்த்து கல்வியிலும் கலையிலும் அறம் சார்ந்த பல தொண்டுகளை புரிந்தது சித்திரமேழிப் பெரியநாட்டு சபை வேளாளர்கள் என்பது தான் வரலாறு. அதன் நீட்சியாக தான் இன்று ஆதீனங்கள் செயல்படுகிறது. 

இத்தகைய நிலக்கிழார்களாக இருந்த வேளாள நாட்டார்கள் நாயக்கர்களிடமிருந்து நிலம் பெற்றார்கள் என்ற போலியான வரலாறுகளை பரப்புவது வேளாளர்களின் மீதான காழ்ப்புணர்வால் தான். குறிப்பாக தென்மாவட்டத்தில் இந்த சோழர்களின் கட்டமைப்பு பெரிதும் இல்லாததால் அவர்களுக்கு இந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை.

நாகப்பட்டினம் முதல் கோவை வரையும் புதுக்கோட்டை முதல் நெல்லூர் வரையும் உள்ள சித்திரமேழி பெரியநாட்டு வேளாளர்களின் மடங்கள் பற்றியும் நாட்டார் கல்வெட்டுகளை பற்றியும் பேராசிரியர் சு.இராசவேலு தெளிவாக பதிவு செய்துள்ளார்.

- பார்கவன் சோழன்.

சோற்றுக்கடைபுராணம் தொடர் - ft. சத்யா டீ ஸ்டால்

  ஒரு டீக்கடை சோற்றுக்கடை ஆகுமா? புராணத்தில் இடம் பெறுமளவிற்கு என்ன சிறப்பு? சேரன்மகாதேவியில் பாபநாசம் சாலையில் அமைந்துள்ள ஒரு கீற்றுக் கொட...