சுமார் ஒன்பது பேரே உட்கார்ந்து உணவு கொள்ளும் வண்ணம் அமைந்த ஒடுக்கமான கடை இது அம்பை -தென்காசி நெடுஞ்சாலையில் இயற்கை எழில் பொங்க அமைந்திருக்கும் ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் தெப்பக்குளத்தருகே அமைந்த சந்தி விநாயகர் ஆலயத்திற்கு சமீபத்தில் ரோட்டடியில் மேட்டில் அமைந்துள்ள சிறிய கடை.
காலையும் மாலையும் நாவுக்கு ருசியாகவும், உடலுக்கு ஏதுவாகவும் நல்ல உணவளிக்கும் சிற்றுண்டி சாலை.
திருநெல்வேலியில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கடையின் காரவடையும், சிவசைல நாதர் ஆலயமும், அவ்வாலயத்திற்கு பின்னே இருக்கும் ஆலமரமும் நமக்கு ஆகச் சிறந்த Stress Buster.
பெரும்பாலும் விறகடுப்பில் தயாராகும் இவர்களது உணவுகள் மிகத் தரமாகவே உள்ளது. காலையில் தயாராகும் சூடான நாலுவிரலுக்குள் அடங்கும் வெண்ணிற இட்லிக்கு அவர்கள் தரும் சட்னியோடு நமது குடல் கொள்ளும் அளவு உண்டாலும் இவர்தம் மொறு மொறு காரவடை வேறு ஒரு போதை தந்து நம்மை ஈர்க்கும். இதற்காகவே நாம் அடிக்கடி இந்த ஊருக்கு பயணிப்பதுண்டு.
இட்லி போதாது என்றால் நாம் வாங்கும் பூரி கிழங்கோடு சேரந்து ஏழிசை இயைந்தொரு புது இராகம் ஆனது போலிருக்கும். ஆமைவடையும் உளுந்தவடையும் நம் உணவிற்கு ஏகாந்த துணைவர்கள்! முடிவில் சிறு குவளையில் இவர்தம் கடையின் கிராமத்து காஃபி நம் ஜென்மம் இன்று ஈடேறியதைக் குறிக்கப் பெரு ஏப்பம் வெடிக்கச் செய்யும்.
வாங்கிய பொருட்களை அன்றழிக்கும் சோற்றுக்கடைகள் என்றைக்குமே உத்தம சுவையுடையோர் தான். அதில் ஆழ்வார்குறிச்சி சண்முகம் பிள்ளை கடை சிறப்பானதே!
- கோமதி சங்கர் சுந்தரம்
No comments:
Post a Comment