நாவுகளால் சுவைத்திடாமல் உங்களால் சுவை உணர முடியுமா? அந்தக் கடையில் தான் சுவைத்து அனுபவித்த உணவுகள் பற்றிக் கூறிக் கூறியே அந்த உணவகத்தை உருவகமாக்கி வைத்துள்ளனர் எம்முள்.
தென்காசியில் எனது லோகா அத்தை தான் முதன்முதலில் அந்தக் கற்பனை சுவைதனை பகிர்ந்தவர். அவர் இந்த உணவகம் குறித்து சொன்ன நிகழ்வு ஒரு ஒளிப்படம் போல் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.
அகிலா உங்கள் தெருவில பலகையில் உட்கார்ந்து சாப்பிடும் சிதம்பரம் பிள்ளை ஹோட்டல் கடை உண்டே! அதில் சாப்பிட்டாற் போல வேற எங்கேயும் என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை என்று என் நாவரும்புகள் மகிழும் உணவளித்த என் அத்தை என்னம்மையிடம் கூறிய போது திகைத்துத் தான் போனேன்!
என் அம்மாவோ, அந்த இராகத்திற்கேற்ற தாளமாக ஆமாம் மதினி! என்ன அருமையாக இருக்கும் அந்தக் கடை இரசம் என்றாள்! இரசமா! அதற்கு இரசனையா என்று இகழ்ச்சியோடு நாம் பாரத்தால், என் தந்தையும் இதில் தில்லானா சேர்த்தார், எங்க அப்பாவுக்கு ( எனது தாத்தா டாக்டர் ப.அ. வெயிலு பிள்ளை) அந்தக் கடை இரசம் தினமும் வேண்டும், ஒரு சிறிய சொம்பு கொண்டு போவேன், பெருங்கூட்டம் வரிசையில் நிற்க என்னைப் பார்த்த மாத்திரத்தில் சுந்தரத்தை நிற்க விடாதே, டாக்டரய்யாவுக்கு இரசம் கொடுத்து விடு என்று சிதம்பரம் பிள்ளை கூறுவார் என்று தாளம் சேர்த்தார்.
எங்கள் அத்தைக்கும் அம்மைக்கும் அந்தக் கடை பிடித்துப் போனதில் சுவை போக வேறு ஒரு காரணமும் உண்டு, என் அம்மைக்கும் அத்தைக்கும் அவர்தம் தந்தையார் பெயர் சிதம்பரம் பிள்ளை என்பதாம்! இதில் என் அத்தைக்கு மாமனாராகவும் சிதம்பரம் பிள்ளை என்றே வாய்த்தது ஆனந்தம் என்பர்.
என்னடா இவங்க இரசத்தை சிலாகிக்கிறார்களே என்று நாம் வெறுப்போடு நின்றிருக்கிறேன்! ஏனெனில் அவர்கள் சிலாகிக்கும் அந்தக் கடை அன்று இயங்கவில்லை! பிறவியிலேயே பார்வை இல்லாதவன் யானை பார்த்தது போல், இல்லாத கடையை எங்கு இரசிக்க, ருசிக்க என்று நாம் இருந்தோம்.
சட்டென்று என் அம்மா என்னைத்தட்டி இவனுக்கு வத்தக்குழம்பே பிடிக்காது, (கருணைக்கிழங்கு போட்டு செய்யும் கடையம் செட்டியார் கடை வத்தக்குழம்பு இன்று கிடைக்கவில்லையே என்று எங்கும் எனக்கா பிடிக்காது என் நாவரும்புகள் உள்ளொலி (mind voice) கூறியது) ஆனால் சிதம்பரம் பிள்ளை ஹோட்டல் வத்தக்குழம்பை இவனுக்கு சண்முகி ஊறுகாய்ன்னு கொடுத்துறுவேன்னு சொன்னார்கள்.
ஆகா அந்த சண்முகி ஊறுகாய் சிதம்பரம் பிள்ளை ஹோட்டல் வத்தக்குழம்பா, என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். அவர்கள் வீட்டில் தான் நான் டியூசன் படித்தேன், அந்த அத்தை செய்யும் புளியோதரை, வத்தக்குழம்பு என அனைத்தையும் சுழிசுத்தமாக வழித்து உண்டுள்ளேன்! ஆனால் இரசம் உண்டதில்லையே என்று என் மனம் வருந்தியது.
அதன் பின்னர் பல்வேறு ஆளுமைகள் இந்த சிதம்பரம் பிள்ளை ஹோட்டல் குறித்து சிலாகித்து கேட்டுள்ளேன், எங்கள் மருந்தகத்தில் நெடுங்காலம் மருந்துகள் வாங்கி வந்த செண்டு வாத்தியார், என் அப்பாவிடம் திருநெல்வேலில கோவில் வாசல் சிதம்பரம் பிள்ளை ஹோட்டலில் சாப்பிட்ட சாப்பாடு வேற எங்கேயாச்சு கிடைக்குமா என்ற போது பல்லாண்டுகள் கழிந்தும் உணவு மனிதனை எப்படி ஆள்கிறது என்று என் மனம் சிந்திக்கிறது....
- கோமதி சங்கர் சுந்தரம்
கந்த சஷ்டி விரதம் ஆரம்பத்திலே இப்படி ஒரு உணவு கட்டுரை. விரதம் இருக்கணுமா! வேண்டாமா? போதும்!
ReplyDeleteபோதும்!
விரதம் முடிந்ததும் இன்னொரு கட்டுரையை விடுங்கள்.