"அண்டரும் மாதவரும் தொழும் அரிய சேவடியைக்;
கண்டடியேன் மகிழத் திருக்கருணை செய்தருள்வீர்;
புண்டரிகப் புதுப்பூமலர் பொய்கை வளம் பொலியும்;
தண்டமிழ் நெல்வேலிதனிற் சந்தி விநாயகரே."
"வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய சந்தி விநாயகர் பதிகப் பாடல்"
ஸ்ரீ சந்தி விநாயகர் திருக்கோயில், திருநெல்வேலி நகர்.
"ஆய்ந்த தமிழ் நெல்லை" என்பார்கள் காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ் ஆசிரியர் அவர்கள், அத்தகைய சிறப்பு வாய்ந்த திருநெல்வேலியில், சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மை திருக்கோயிலின் தேர்கள் ஓடும் நான்கு இரதவீதிகளில் ஒன்றாகிய மேலரதவீதியின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ள திருக்கோயிலே இந்த சந்தி விநாயகர் திருக்கோயில்.
மூலவர் சந்தி விநாயகர் கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார், இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட திருக்கோயிலாகும், இங்கு ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் சந்நிதி உட்பட பல்வேறு சந்நிதிகளோடு சிறப்புடன் விளங்கும் கோயிலாகும். அகத்திய மாமுனிவரால் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் இந்த விநாயகர் என்பர். இங்கு நடைபெறும் மாலை வேளை பூசை மிகவும் சிறப்புடையதாகும்.
சந்தி விநாயகர் பேரில் பாடப்பட்ட பிரபந்தங்கள்:
1. திருநெல்வேலியில்
திருவருள் பெற்று விளங்கிய,
ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளை அவர்கள் அருளிச்செய்த
திருநெல்வேலித் தலபுராணத்தில் கடவுள் வாழ்த்து பாடற் பகுதியில்
"சந்தி விநாயகர் வணக்கம்" அருளிச்செய்துள்ளார்கள்,
2. கவிராஜ நெல்லையப்ப பிள்ளை அவர்கள்
"சந்தி விநாயகர் இரட்டைமணி மாலை" இயற்றியுள்ளார்கள்,
3. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
"நெல்லை சந்தி விநாயகர் பதிகம்" அருளிச்செய்துள்ளார்கள்,
4. திருநெல்வேலி காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ் பாடிய, தச்சநல்லூர் வ. அழகிய சொக்கநாத பிள்ளை அவர்கள் காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழின் காப்பு பருவ பாடலில்,
சந்தி விநாயகர் பாடல் அமைத்துள்ளார்கள்,
5. திருநெல்வேலி காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ் பாடிய, தச்சநல்லூர் வ. அழகிய சொக்கநாத பிள்ளை அவர்கள் இயற்றிய கீர்த்தனை பாடல்களில், சந்தி விநாயகர் பேரில் கீர்த்தனைகளையும் நமக்கு அளித்துள்ளார்கள்.
6. செழுங்கவிச் செம்மல் தி.சு. ஆறுமுகம் அவர்கள், "நெல்லை சந்தி விநாயகர் கவசம்" மற்றும் "நெல்லை சந்தி விநாயகர் வாரப் பதிகம்" இயற்றியுள்ளார்கள்,
7. தொண்டர்சீர் பரவுவார், கவிஞர் நெல்லை மு.சு. சங்கர் அவர்கள் "சந்தி விநாயகர் கீர்த்தனை" இயற்றியுள்ளார்கள்,
8. திருவைகுந்தம் கம்பபாத சேகரன் அவர்கள், "திருநெல்வேலி சந்தி விநாயகர் பிள்ளைத்தமிழ்ப் பதிகம்" இயற்றியுள்ளார்கள்,
9. ச. தங்கமணி அவர்கள், "நெல்லை சந்தி விநாயகர் துதிகள்" பாடியுள்ளார்கள்.
மேற்கண்ட பல்வேறு பிரபந்தங்களின் பட்டியல்களை அறிந்தவரை குறிப்பிட்டேன், மேலும் வளரும்.
- நெல்லை தமிழ் விரகன்
No comments:
Post a Comment